பாவம் ரெட்டைவால்   குருவி...

    அன்று ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். காலை வேளையில் ரயில் திருநெல்வேலியை நெருங்க upper birth த்திலிருந்து இறங்கி கீழே உட்கார்ந்தேன். ஒரு வயதான அம்மா பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சிரித்துக் கொண்டே என்னிடம் பிஸ்கட்டை நீட்டினார்கள். என் சிறு மூளை கேட்டது வாசித்தது எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எச்சரிக்கை செய்ய “வேண்டாம் அம்மா” என்றேன் தயக்கத்துடன்...    

      ஆனால் அவர்களுடன் பேச ஆரம்பித்தேன். “நான் யார்?” என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு “YFC யில் ஊழியக்காரியாக இருக்கிறேன்” என்று நான் சொல்ல “எனக்கு YFC ரொம்ப பிடிக்கும் நான் படிக்கும்போது YFC மீட்டிங்குங்னா ஆசையாக ஓடுவேன்” என்றார்கள்.   

       இருவரின் சம்பாசனை தொடர ஒரு கட்டத்தில் அவர்கள் “நான் நிறைய ஊழியர்களுக்கு மணியாடர் செய்வேன்” என்றார்கள். “என்னுடைய அம்மாவும் உங்களை மாதிரிதான்” என்று சொல்லி முடிக்கவும் “இப்போ நான் அப்படி அனுப்புவது இல்லை” என்றார்கள் “எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்” என்றார்கள். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஸ்டேஷன் வரவும் இறங்கினோம்.

  அந்த “ஏமாற்றுகிறார்கள்” என்ற வார்த்தை ஊழியக்காரியாகி என் காதில் ரீங்காரம் செய்து கொண்டு இருந்தது... கூடவே இவ்வளவு நல்ல அம்மாவிடம் “பிஸ்கட் வேண்டாம்” என்று சொன்னதும் கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.   

       வீட்டுக்கு வந்தவுடன்  ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். ரெட்டைவால் குருவி பயமின்றி உட்கார்ந்திருந்தது. எங்க வீட்டுக்குள் அந்த குருவி இஷ்டத்துக்கு வரும். கிச்சனில் சிந்தியதை சாப்பிடும். மேஜையில் உள்ள சாப்பாட்டையும் சாப்பிடும். ஃபேனில் ஜாலியாக உட்காரும். அது விளையாடும் போது ஃபேன் கூட போடுவது இல்லை. எங்கள் வீட்டுக்குள் இஷ்டத்துக்குள் வந்து போகும். அதை தடுத்ததும் இல்லை. வீட்டுக்கு வெளியே ஒரு குழாயை கட்டி தொங்க விட்டார் என் துணைவர். அதில் குடும்பமாக வசிக்க ஆரம்பித்தது.

    எத்தனை நாள் ஊருக்கு போனாலும் குருவிக்காக கிச்சன் ஜன்னலை மூடி வைப்பது கிடையாது சில மாதங்களுக்கு முன்பு வரை. இதே போல வெளியே போய் வரும்போது கிச்சனில் ஒரு பாம்பு குடியேறி இருந்தது. சுற்றியுள்ளவர்கள் பாம்பை அடிக்க… அடுத்த நாளே வீட்டின் அனைத்து ஜன்னல்களையும் கம்பி வலையால் அடித்து விட்டு தான் பெருமூச்சு விட்டோம். இப்போதும் ஜன்னல் திறந்துதான் இருக்கு. நெருடலுடன் ஜன்னலின் வலையை தடவினேன். எங்கோ ஒரு இடத்தில் நம்பிக்கை உடைக்க படும் போது… பாவம் ரெட்டைவால் குருவி 

-மேபல்-

“நமக்கு என்னடா நடக்குது … இதுக்கெல்லாம் காரணம் என்ன…? “ யோசித்து கொண்டு வெளியே வரும் போது எங்கள் வீட்டுக்கு முன் சிட்டுக்குருவி கட்டி கொண்டு இருந்த கூட்டை கவனித்தேன். ஒரு சின்ன குழாயை கட்டி தொங்க விட்டு அதன் ஒரு பக்கத்தை மூடி வைத்திருந்தோம். எப்படி என்று தெரியவில்லை. அந்த மூடியை காணவில்லை. மூடி தவறி கீழே விழுந்து இருந்தால் மூடி அங்கு கிடக்க வேண்டும். யாரோ அந்த மூடியை எடுத்து இருக்க வேண்டும்… அந்த சிட்டுக்குருவி ஒருபக்கம் கூடு கட்டுவதும் கலைந்து மறுபக்கம் விழுவதுமாக இருந்தது. அது தெரியாமல் மறுபடியும் மறுபடியும் கூட்டை கட்டிக் கொண்டே இருந்தது. பார்க்கப் பரிதாபமாக இருக்க மறுபடியும் ஒரு மூடியை கண்டுபிடித்து குழாயை அடைத்து விட  குருவிக்கும் நிம்மதி எங்களுக்கும் நிம்மதி. இது போல நிறைய நேரம் நம் கூட்டை யாரோ கலைத்துக் கொண்டே இருப்பாங்க அது தெரியாம அந்தக் குருவியை போல நாம் கூட்டை கட்டிக்கொண்டே இருப்போம். சில நேரங்களில் “யார் இப்படி பண்ணினாங்க… “ என்று யோசித்து யோசித்து காரணம் தெரியாமல் குழம்பிக் கொண்டே இருப்போம்.  இரண்டு காசுக்கு ஐந்து   அடைக்கலான்  குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.

(லூக்கா 12:6). என்று கூறிய இயேசு கிறிஸ்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நிச்சயமாய் உதவி செய்வார். ஆம், யார் காரணம் என்று தெரிவது முக்கியமல்ல நமக்காக ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்திருந்தால் அதுவே போதும். ஏனெனில் அவர் நம்மை மறக்க மாட்டார்.

-மேபல் டேனியல்-