இயேசுவின் மீது விசுவாசம் கொள்ளுதல்


இயேசு உயிர்த்தெழுந்த தினம் அன்று மாலை வேளையில் சீடர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினார். 


யூதர்களுக்கு பயந்த சீடர்கள் ஒரு தனி அறையில் பூட்டிய வீட்டுக்குள் தனித்து இருந்தார்கள். 


இயேசு அவர்களிடம் தோன்றினார். இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளும் படியாக இயேசு தனது கைகளையும் விலாவையும் தனது சீடர்களுக்கு காண்பித்தார்.


இயேசு தான் சிலுவையில் பட்ட பாடுகளுக்கு அடையாளமாக இந்த காயங்கள் அவருடைய சரீரத்தில் காணப்பட்டது.


சீடர்கள் அதைக் கண்டு அவர் இயேசு தான் என்பதை அறிந்து சந்தோசம் அடைந்தார்கள்.


ஆனால் இந்த இடத்திலே குறித்த சீடன் ஒருவன் இல்லாது இருப்பதை நாங்கள் காண்கிறோம்.


யூதர்கள் இயேசுவை எதிர்த்தபடியினாலே சீடர்கள் யூதர்களுக்கு பயந்திருந்தார்கள். அதனால் சீடர்கள் ஒழிந்து கொண்டிருந்தார்கள்.


ஆனால் தோமா என்ற சீடன் பயந்து ஒழியவில்லை. அல்லது அவன் கிறிஸ்துவின் சீடனாக இருப்பதை விட யூதர்களோடு சேர்ந்து கொள்ள விரும்பியிருக்கலாம்.


தோமா மீண்டும் சீடர்களோடு இருக்கிற பொழுது மற்றைய சீடர்கள் அவனிடம் தாங்கள் இயேசுவை கண்டதை குறித்து அறிவித்தார்கள்.


யூதர்கள் உயிர்த்தலை நம்ப மறுப்பதை போல தோமாவும் உயிர்த்தெழுதலை நம்ப மறுக்கிறான். 


அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் கண்டு அந்த காயத்திலே என் விரலை இட்டு என் கையை அவருடைய விலாவிலே போட்டால் ஒழிய விசுவாசிக்க மாட்டேன் என அவன் கூறியதை நாம் காண முடிகிறது.


இவ்விதமாக இயேசுவின் உயிர்த்தெழுத்தை நம்ப முடியாதவனாக தோமா தன்னை வெளிப்படுத்துவதை காணக் கூடியதாக இருக்கிறது.


நாம் கூட இயேசு நமக்கு செய்த அற்புதங்களை நம்ப முடியாதவர்களாக இருக்கின்ற சந்தர்ப்பங்கள் அநேகமுள்ளன. அதற்கு பல காரணங்களை நாங்கள் கூற முடியும். நாம் எவைகளை கற்றுக் கொண்டோம் அதன் மீது நம்பிக்கை இருத்தல். நம்முடைய சமுதாயத்தினர் எதை நம்புகிறார்கள் அதன் மீது நம்முடைய நம்பிக்கை காணப்படுதல். பெரும்பான்மையினரின் நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்ளுதல். அற்புதங்கள் அதிசயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருத்தல். புதிய இயற்கைக்கு மாறான சம்பவங்களை விளங்கிக் கொள்ள முடியாது இருத்தல்.


ஆகவே தோமாவும் இயேசு சீடர்களுக்கு காட்சி அளித்த காரியத்தை நம்ப முடியாதிருந்தான். சீடர்கள் தன்னை ஏமாற்றுகிறார்களோ என கூட அவன் எண்ணியிருக்க முடியும்.


இவ்விதமாக ஏழு எட்டு நாட்களாக தேவன் சீடர்களுக்கு காட்சியளித்ததை அவன் நினைத்துப் பார்க்க வேண்டியதாக இருந்தது. ஏன் தான் இயேசுவை காண முடியவில்லை என அவன் எண்ணி இருக்க முடியும்.


ஆனாலும் இயேசு அவனுடைய சந்தேகத்துக்கு பதில் அளிக்கும் வண்ணம் அவனுடைய விசுவாசத்தை பெருக்கும் வண்ணம் செயல்படுவதை நாம் காணக் கூடியதாக இருக்கிறது.


மீண்டுமாக சீடர்கள் கூடி வந்த நாளில் இயேசு அவர்கள் மத்தியில் காட்சி அளிப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. 


சீடர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலின் முதலாம் நாளில் மாலை வேளையில் ஒன்றாக கூடி வந்து ஒரு அறையில் இருந்தது போல அடுத்த வாரமும் கூடி வந்திருக்கிறார்கள். வாரத்தின் முதலாம் நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடிவரும் பழக்கம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.


அதுவும் அவர்கள் கூடி வரும் இடம் வீடாக காணப்படுவதை நாம் காணலாம். 


ஆக கிறிஸ்துவுக்கு பின்னர் சீடர்கள் வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளைகளில் தேவனை ஆராதிக்கும் படியாக வீட்டில் இருப்பதை நாம் காணலாம்.


இயேசு அந்த வீட்டில் இரண்டாவது தடவையாக தோன்றுகிறார். அங்கே அவரை விசுவாசியாது இருந்த தோமாவும் இந்த தடவை மற்ற சீடர்களோடு இருக்கிறார்.


இயேசு குறிப்பாக தோமாவின் விசுவாசத்தை அதிகரிக்கும் வண்ணம் தோமாவுடன் தனிப்பட்ட ரீதியிலே பேசுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.


தோமாவை நோக்கி உன் விரலை இங்கே நீட்டி என் கைகளை பார். உன் கையை நீட்டி என் விலாவில் போடு. அவிசுவாசியாய் இராமல் விசுவாசியாய் இரு என்கின்றார்.


இயேசுவின் இந்த வார்த்தைகளை கேட்டதும் தோமாவுக்குள் இருந்த சந்தேகம் மற்றும் கவலை, துக்கம் மன வேதனை போன்றவைகள் நீங்கி போக முடிந்தது.


ஆச்சரியத்துடனும் பிரமிப்புடனும் தோமா பதிலளிக்கின்றான். என் ஆண்டவரே என் தேவனே என பதில் அளிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.


இயேசு அவனுக்கு உறுதியாக நீ என்னை கண்டதினாலே விசுவாசித்தாய். காணாதி இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். எனக் கூறி அவனுடைய விசுவாசத்தை தூண்டி விடுவதை காணக் கூடியதாக இருக்கிறது.


இவ்விதமாக தோமா இயேசுவை குறித்த விசுவாசத்தில் பலப்பட்டு இந்தியா வரை அவன் இயேசுவை அறிவிக்க புறப்பட்டு செல்வதை நாம் சரித்திரத்திலே காணக்கூடியதாக இருக்கிறது.


இந்தியாவின் பல இடங்களில் பல சேவைகளை செய்வதற்கு தேவன் தோமாவுக்கு கொடுத்த விசுவாசம் அவனை பலப்படுத்தி பல அற்புதங்களை அடையாளங்களை செய்வதற்கு வழிவகுத்தது.


இயேசு உயிர்த்தெழுந்த இந்த காரியங்களை குறித்து அந்த அறையில் இருந்த ஒரு சீடன் பேதுரு சாட்சி கொடுப்பதை நாம் காண்கிறோம்.


அவன் யூதர்களுக்கு பிரசங்கம் செய்கையில் இரண்டு தீர்ங்கதரிசிகளுடைய தீர்க்க தரிசனங்களை குறித்து ஞாபகப்படுத்துகிறான்.


யோவேல் தீர்க்கதரிசி கூறிய வண்ணம் கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் தேவன் தம்முடைய ஆவியை ஊற்றி அவர்கள் தீர்க்க தரிசனம் சொல்வார்கள் என்பதையும்


தாவீது தீர்க்கதரிசனத்தின் மூலம் என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தர் அழிவை காணவொட்டீர் எனக் கூறிய வண்ணமும் 

இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் பேதுரு யூதர்களுக்கு நினைப்பூட்டுவதை நாம் காண்கின்றோம்.


இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொள்வோம். இயேசுவின் தீர்க்கதரிசன நிறைவை வாக்குப் பண்ணினபடி காரியங்கள் நடந்தேறுவதை நாம் நினைவில் கொள்வோம்.