சீடர்களுடனான இறுதி இராப்போஜன பந்தி




இயேசுவின் அன்பின் செயற்பாடாக அவர் தனது சீடர்களுடனான இறுதி உணவை உட்கொள்ளும் நாள் பெரிய வியாழன்  தினமாக உள்ளது. 


இயேசு தன்னை விசுவாசிக்கும் படியாக மக்களுக்கு எவ்வளவு தரம் எடுத்துக் கூறியும் மக்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களுடைய மதத் தலைவர்களின் தீய நடத்தை மற்றும் பிழையான தலைமைத்துவ முன்மாதிரி காரணமாக மக்கள் சரியான விதத்தில் தீர்மானிக்க முடியாது இருந்தது.


மெய்யான இறைவனாக கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தும் போதெல்லாம் மதத் தலைவர்கள் எழும்பி மக்களை அடக்கி ஆள்வதை காணலாம். 


மெய்யான கிறிஸ்துவின் பக்கம் யாரும் திரும்பாத வண்ணம் மதத் தலைவர்கள் அந்நாட்களில் எழும்பினார்கள்.


பொல்லாத மத தலைவர்கள் மக்கள் தங்களை விட்டு திரும்பி விடுவார்கள் என பயந்து மெய்யான கிறிஸ்துவுக்கு எதிராக சமயம் பார்த்து அவரை கொலை செய்ய வகை தேடினார்கள். ஆகையினாலே மக்களும் அந்த மதத் தலைவர்களுக்கு பயந்து தங்கள் கொள்கைகளை வெளிகாட்ட முடியாத நிலைமையில் வாழ்ந்து வந்தார்கள்.


அதனால் தான் பாஸ்கா தினத்துக்காக வந்திருந்த மக்கள் முதல் நாளிலேயே இயேசுவை கிறிஸ்த்துவாகவும் பிரச்சாரராகவும் இரட்சகராகவும் மீட்பராகவும் துதி பாடியதை மத தலைவர்கள்  கேள்விப்பட்டதும் பெரிதும் கலக்கம் அடைந்து கிறிஸ்துவின் பக்கம் மக்கள் செல்லாத வண்ணம் பாதைகளை தடை பண்ண தொடங்கினார்கள்.


மதத் தலைவர்கள் சரியான நீதியை செய்ய தவறி தங்களுக்கென ஒரு நீதியை உருவாக்கி அதை கடைபிடித்ததால் அவர்கள் மெய்யான பாதையில் செல்ல மக்களையும் அச்சுறுத்தினார்கள்.


இயேசு தான் பாஸ்கா பண்டிகையிலே கடைசி நாட்கள் வந்து விட்டது என்பதை அறிந்து இறுதி பஸ்கா பலியாக தன்னைத்தானே ஒப்புக் கொடுக்க முன் வந்தார். இத்தனை நாட்களும் பஸ்கா பலியாக ஆடு பலியானது. இந்த பஸ்கா பண்டிகையிலேயே மெய்யான ஆடாகிய இயேசு கிறிஸ்து முழு உலக மக்களின் பாவங்களுக்காக ஒரே தரம் மரித்தார். 


அவரது மரணத்துக்கு முன்பதாக சீடர்களோடு கடைசியாக ஒன்றாக கூடி அவர்களோடு இறுதி உணவை உட்கொள்ளும் சம்பவம் பெரிய வியாழனாக பதிவு செய்யப்படுகிறது. 


ஒரு பக்கத்தில் அவருடைய சீடன் ஒருவன் அவரை காட்டிக் கொடுக்கும் படியாக அவரை விட்டு விலகி செல்கிறான். யூதாஸ் ஸ்காரியோத்து இயேசுவை காட்டிக் கொடுக்கும் படியாக அவனுக்குள்ளே பிசாசு நுழைவதை காணலாம்.


பிசாசு ஒரு மனிதனுக்குள் நுழைந்து இன்னொரு மனிதனை கொலை செய்யும்படியான திட்டத்தை தீட்டுவது இவ்வாறு வெளிப்படுகிறது. 


இன்றைய ராத்திரியிலே இயேசு உணவருந்திக் கொண்டிருக்கும்போது திடீரென எழுந்திருந்து சீடர்களுடைய கால்களை பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் மூலம் கழுவி துடைத்தார்.


குறிப்பாக சீமானேனும் பேதுரு மிகவும் ஆவலாக அதை எதிர்பார்த்து மகிழ்ந்தான்.


அதன் பின்னர் இயேசுவின் போதனை சீடர்களை பலப்படுத்தியது.


உலகத்தில் சமாதானத்தை வைத்து போவதாக கூறிய இயேசு கிறிஸ்தவர்கள் அவர்களின் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதற்கு தைரியம் ஊட்டுகிறார்.


தாம் அனுப்பிய பிதாவின் இடத்தில் செல்வதாக இயேசு தம் சீடர்களுக்கு அறிவித்தார்.


இயேசு உலகத்தில் இருந்து வராதபடியினால் இந்த உலகத்தில் அன்பு கூற வேண்டாம் என எச்சரிப்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


இறைவனோடு இயேசு ஒன்றாய் இருப்பது போல கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவுடன் கூட ஒன்றாய் இருக்கும் படியாக வாக்கு அருளியிருக்கிறார். 


கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து உடன் கூட இருக்கிறார்கள். ஆகவே கிறிஸ்தவர்களுக்கு நடக்கும் பாடுகளை கிறிஸ்து அறிந்திருக்கிறார்.


கிறிஸ்தவர்கள் மீதான துன்பங்களை கொடூரங்களை இயேசு அறிகிறார். 


ஒரு வழியாய் துன்பங்களை செய்ய வருவோர் ஏழு வழியாய் துரத்துண்டு போவார்கள் என்பதற்கு இன்றைய உலகில் பல்வேறு சாட்சிகள் காணக் கிடைக்கின்றது. 


கிறிஸ்தவர்களை எதிர்க்கும் மக்கள் ஆரம்பத்தில் முழுமூச்சாய் கிறிஸ்தவர்களை எதிர்த்த போது சாதிப்பதாக நினைத்து பீறிட்டார்கள். ஆனால் கடைசியில் அவர்களுக்கு அதற்கு மேலான எதிர்ப்புகள் ஏற்பட்ட போது கூனிக்குறுகி போவதை காணக் கூடியதாக இருக்கிறது.


கிறிஸ்து தாமே கிறிஸ்தவர்களின் பெலனாக இருந்து இன்றைய நாளிலும் வெற்றியை கட்டளையிடுவாராக. 


இயேசு கிறிஸ்துவின் இறுதி இராப்போசன ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்.