பெளத்த மத பேரினவாத சிந்தை வடக்கு கிழக்கை நோக்கி கடந்து வருவதை அண்மைக்காலமாக காணக் கிடைக்கின்றது. சிங்களம் கடந்த சிங்கள மதவாதம் சிங்கள அரசால் மறைநிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழர்கள் கைபற்றிக் கொண்ட பண்மையான நிலம் இன்று மாற்றான் கையில் அகப்பட்ட நிலையில் கடும் துயரங்களை சந்தித்து வருகின்றது. மீண்டெழும் வல்லமை இல்லாது தவிக்கின்றது தமிழ் பூமி. எங்கும் எதிலும் சிங்கள பெளத்த முலாம் பூசப்பட்டு வருகின்றது. மதவெறியின் உச்சகட்ட நிலைமாற்றம் வெளிப்படுத்தப்பட்டு பூர்விக குடி அந்தஸ்து மறைக்கப்படுகின்றது. பெளத்த சின்னங்கள் நாட்டப்படுகின்றன.  திடீரென புத்த உருவச்  சின்னம் முளைக்கின்றது. போதாக்குறைக்கு வைக்கப்பட்ட சின்னங்களை காணவில்லையென்ற முறைப்பாடுகள் வேறு. தமிழ் பேசும் பெளத்தர்கள் அதிகரித்து வருகின்றனர். கட்டுப்படுத்த முடியாத நிலையில்  சிவசேனா குழுவினர் தங்கள் ஆத்திரத்தை கொட்டி ஆர்ப்பரிக்கின்றனர். சிங்களவர்களை போற்றுவதா துாற்றுவதா என தெரியாமல் தவித்து போகின்றனர் அவர்கள். அவர்கள் பாடு கடும் திண்டாட்டமாய் போய்க்கொண்டுதான் இருக்கின்றது.

பல வருட உள்நாட்டு யுத்தம் கொன்றழித்த தமிழர் நிலை இன்னும் குறையவில்லை. கடல் நீரில் மூழ்கி மரணம், காதல் தோல்வி மரணம், வாகன விபத்தால் மரணம், முடியாத தற்கொலைகள் இன்னமும் வடக்கு கிழக்கில் தொடர்ந்து கொண்டிருப்பது தான் சோகம். இதற்கு சிவசேனா என்ன தீர்வு வைத்திருக்கின்றது என்பது தான் கேள்விக்குறியே.. 

2019ல் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களால் அதிர்ந்து போன (தமிழ், சிங்கள) கிறிஸ்தவர்களின் நிலை இன்னமும் இலங்கை மக்களால் மறந்துவிட முடியாத அதிர்வலைகளில் ஒன்று. நான்கு வருடங்கள் கடந்தும் கிறிஸ்தவ மக்கள் துயர் நிறைந்த வலிகளுடன் இன்றும் இருக்கின்றார்கள். மதங்களால் மனிதர்களை அழிக்கும் துயரம் இலங்கை மக்களை விட்டு விலகிச் சென்றிடா வண்ணம் நிலைத்து நிற்கின்றது. மதம் எப்போதுமே சமாதானத்தை தரும் ஒன்றாக கருதப்பட முடியாத சிந்தைக்குள் இலங்கை. பெளத்தத்தால் தமிழர்களும், சைவர்களால் கிறிஸ்தவர்களும் எதிரிகளாக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்தவருக்கு குண்டு தாக்குதல் நடத்தியவர்களின் இன்றைய நிலையென்ன.. கிறிஸ்தவர் மீது அபாண்ட மதமாற்ற குற்றத்தை சாட்டியவர்களின் நிலையென்ன.. இரண்டும் சிங்கள பெளத்தர்களின் ஆதிக்கத்தின் கீழ் தண்டனை அனுபவிக்கின்றன, ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. பெளத்தம் தலைவிரித்தாடுகின்றதென கோசமிடுகின்றனர்.

அரசின் நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் பல கதைகள் பேசப்படுகின்றன.