ஹரியாணா கலவர பூமி


பஜ்ரங் தள உறுப்பினரான மோனு மனேசர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த சர்ச்சை காணொளிகளை சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் பகிர்ந்ததாகத் தெரிகிறது. பசுவதை செய்யப்பட்டதாக இரண்டு இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் இந்த மோனு மனேசர்.

இவர் யாத்திரையின் போது தானும் மேவாட் பகுதிக்கு வருவேன் என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.

“உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு எங்களிடம் வந்தது. மசூதியின் பாதுகாப்பை போலீஸார் செய்வார்கள் என்று எங்களிடம் கூறினர். போலீஸ் குழு மசூதியிலேயே இருக்கும் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. மசூதியின் இமாம் மற்றும் இங்கு வசிக்கும் இரண்டு ஊழியர்களைப் பற்றி நாங்கள் பேசியபோது, ​​​​கவலைப்பட ஒன்றுமில்லை என்று போலீசார் தெரிவித்தனர்,” என்கிறார் அஸ்லம் கான் .

​​மசூதி கமிட்டியிடம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக டிசிபி நிதிஷ் அகர்வாலும் பிபிசியிடம் தெரிவித்தார்.

”மக்ரீப் தொழுகையை முடித்துவிட்டு நாங்கள் மசூதியிலிருந்து திரும்பியிருந்தோம். போலீசாரும் உடனிருந்தனர். நள்ளிரவு 12 மணி முதல் 12.30 மணிக்கு இடையே மசூதி திடீரென தாக்கப்பட்டது. முதலில் மசூதியின் கேமராக்கள் உடைக்கப்பட்டன. பின்னர் தீ வைக்கப்பட்டது,” என்று அஸ்லம் கான் கூறினார்.

ஹரியானாவில் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியில் அந்த அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி குருகிராம் - அல்வார் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் அடங்கிய குழு ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இரு தரப்பும் மோதிக் கொள்ள, அங்கு கலவரம் மூண்டது. உடனடியாக தகவல் கிடைக்க, போலீஸார் அங்கு குவிந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். பின்னர் கலவரக்காரர்களை நோக்கியும் போலீஸார் சுட்டனர். அரசு, தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.